gfhf“எங்களிடம், இனவாதமோ, மதவாதமோ இருக்கக்கூடாது. அதற்கு அப்பால் எங்களிடம் மனித நேயம் இருக்க வேண்டும். அதுதான் சரியான நல்லுறவை ஏற்படுத்தும். இனவாதத்தையும் மதவாதத்தையும் இந்த நாட்டிலே அரசியல் செய்வதற்கு வளர்ப்போமானால், இந்த நாட்டை ஆக்கபூர்வமான நாடாகக் கட்டியெழுப்ப முடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பரிமாற்ற தேசிய நிகழ்வு, மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஈச்சந்தீவில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அந்நிகழ்வில், தொடர்நது உரையாற்றிய அவர், “இந்த நாட்டில், இனங்களுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகள், வன்முறைகள் என்பன, நீண்ட காலமாக இடம்பெற்று வருவதை நாங்கள் கண்டுவந்திருக்கிறோம்.  அதன் உச்சகட்டத்தை மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அனுபவித்திருக்கிறோம். “இவ்வாறான பிரச்சனைகளுக்கும் இன ரீதியான முறண்பாடுகளுக்கும் அடிப்படைக் காரணம் யாதெனில், புரிந்துகொள்ளாமையாகும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருந்தால், இப்படியான அழிவுகளை நாம் சந்தித்திருக்க நேர்ந்திருக்காது.

“இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம், சிறுபான்மைச் சமூகத்தை நேசிக்க வேண்டும். சிறுபான்மை சமூகம் பெரும்பான்மை சமூகத்தை நேசிக்க வேண்டும். இவ்வாறாக பரஸ்பரம் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, தாராள மனப்பாங்கு போன்ற இன்னோரன்ன நல்ல மனித விழுமியங்களை நாங்கள் கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவுதான், நாங்கள் சந்தித்த அழிவுகளாகும். “நாங்கள் வெறுமனே பேசுவதனாலோ, எழுதுவதனாலோ, சமாதானம் என்பதோ, இன ஐக்கியம் என்பதோ வந்துவிடப் போவதில்லை. செயற்பாட்டு ரீதியான விடயங்கள் தான், உண்மையான இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் வளர்க்கும். அந்த வகையில், இளைஞர் சேவையோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுத்திருக்கின்ற இந்த செயற்பாட்டை வரவேற்கின்றேன். “இனவாதத்தையும் மதவாதத்தையும் நாங்கள் களைய வேண்டும். அதுவே இந்த நாட்டை ஒரு வளமான நாடாக மாற்றுவதற்கு வழிவகுக்கும்” என்றார்.