அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளே இந்தப் பத்து மனுக்களையும் தாக்கல் செய்யவுள்ளனவென, தகவல் வெளியாகியுள்ளது.
சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனை, அரசமைப்பின் 20ஆவது திருத்தமாக, நாடாளுமன்றத்தின் சமர்ப்பிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அந்த திருத்தம், உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுமாயின், அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளனவென தெரியவந்துள்ளது. ஒன்றிணைந்த எதிரணி, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்), நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) உள்ளிட்ட தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகளும் மற்றும் சிவில் பிரதிநிதிகளுமே இவ்வாறு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான விசேட வர்த்தமான அறிவித்தல், வெளியாகியுள்ளமையால், அத்திருத்தம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், நாடாளுமன்றத்தில் அடுத்தவாரமளவில் தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர், அது தொடர்பிலான ஜனாதிபதியின் முடிவைப் பெற்றுக்கொள்வதற்காக, அந்த வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில், வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் பதவிக்காலம், அடுத்து மாதத்துடன் நிறைவடைய உள்ளன.
அந்த மாகாண சபைகள் உள்ளிட்ட சகல மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் ஒரேநாளில் நடத்தும் நோக்கிலேயே, அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.