யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வன்னி பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டு தனியான பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கீழ் பிரயோக கணிதம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் நடத்திச் செல்லப்பட்ட வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் பம்பைமடுவில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த, நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இதனை பல்கலைக்கழகமாக மாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாராளுமன்றத்தில் யோசனை ஒன்று கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில் அவதானம் செலுத்தி அமைச்சரவையின் அனுமதியின் கீழ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக மிக விரைவில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம்.
தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளோம். தற்போது பல்கலைக்கழகத்திற்கான கட்டிடங்களை கட்டும் நடவடிக்கையும் இறுதித் தருவாயில் இருக்கின்றது. வன்னி பல்கலைக்கழகத்தை அனைத்து வசதிகளையும் கொண்ட பல்கலைக்கழகமாக அமைப்பதாக குறிப்பிட்டார்.