ddsds“2018ஆம் ஆண்டு, இலங்கைக் கடற்பரப்புக்குள் வருகை தரவுள்ள நோர்வேயின் புதிய ஆராய்ச்சிக் கப்பலான பிரிட்டோவ் நன்சன், இலங்கைக் கடற்பரப்பில் கடல் வளங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளது” என, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வேத் தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த, தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவுக்குள் இக்கப்பலின் வருகையைத் திட்டமிட்டு இற்றைப்படுத்தும் நிகழ்வை அங்கிகரிக்கும் நிகழ்வு, நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில், கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீரவும் கலந்துகொண்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “இப்புதிய ஆராய்ச்சிக் கப்பலானது, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் உயிர்ப்பல்வகைமையை மையப்படுத்திய கடல் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான நோர்வே உதவித்திட்டத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்கான வாய்ப்பாகும்.

இது, நோர்வேயின் புதிய சமுத்திர மூலோபாயத்தின் பகுதியாகும் என்பதோடு, இச்செயற்பாடானது, துறைசார் எல்லைகளைத் தாண்டியும் சர்வதேச எல்லைகள் கடந்தும் அறிவுப் பகிர்வை அதிகரிப்பதால், நோர்வே இதை சமுத்திரங்களுக்கான கூட்டுப்பங்காண்மையாகக் கருதுகிறது” என்றார். இலங்கை மற்றும் நோர்வே மீன்பிடித்துறை அமைச்சுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்பின் பகுதியாக நடைபெறும் இந்த மதிப்பீட்டுக்கான அங்கிகாரம் இருநாடுகளதும் உயர் அரசியல் தலைமைகளிடமிருந்து கிடைத்துள்ளது.

கடல்வளங்களின் தற்போதைய நிலை, மீன்வளத்தின் இருப்பு, கண்ட மேடைகள், சாய்வுகளில் பயன்படுத்தப்படாதஃகுறைவாகப் பயன்படுத்தப்படும் மீன்வளங்களை ஆய்வு செய்தல் ஆகியவை, இம்மதிப்பீட்டின் நோக்கங்களாகும். இலங்கையில், இவ்வாறான இருப்பு மதிப்பீடு, 1978முதல் 1980ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், இதற்கு முந்திய பிரிட்டோவ் நன்சன் கப்பலால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.