un trincoதிருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை கிராமங்களில் மீளக்குடியேறிய மக்கள் தமது விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிக்குமாறும் விடுவித்தவற்றிக்கான முறையான ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி மனித உரிமைகள் ஆணைக்குளுவின் திருகோணமலை பிராந்திய செயலகத்தில் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனைக் கிராமத்தில் உள்ள 3 கிராம அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் இணைந்து முறைப்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய செயலகத்தில் இன்றுகாலை 11.00 மணியளவில் கடிதங்களையும் அதற்கான பூரண ஆவணங்களையும் கையளித்துள்ளனர். இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட சம்பூர் கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் எஸ்.சண்முகநாதன், சும்பூர் பிரதேசத்தில் உள்ள நான்கு முக்கிய காணிப் பிரச்சனைகள் சம்பந்தமாக இன்று ஆணைக்குழுவிடம் ஆதாரங்களுடனான கோவைகள் மற்றும் கடிதங்களைக் கையளித்துள்ளோம். அதனுடன் முறைப்பாட்டையும் பதிவுசெய்தோம். மேற்படி எமது கிராமங்கள் அனல் மின் நிலைய திட்டத்தாலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தொடர்ச்சியாக நாம் பல தரப்பிலும் முறையிட்டு வருகின்றோம். எங்களுடைய கிராமம் மூன்று கட்டங்களாக குடியேற்றப்பட்டது.

முதலாவது 365 குடும்பங்கள் பின்னர் படிப்படியாக 950 குடும்பங்கள் வரை, குடியேற்றப்பட்டது. அதன்போது 818 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆனால் அவற்றிக்கான முறையான ஆவணங்கள் தரப்படவில்லை. அதனை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்றும் இரண்டாவது, சாயக்கர வட்டவான் என்ற பகுதியில் 40 ஏக்கர் காணியை கடற்படை கோரியதற்கிணங்க எமது 18 குடும்பங்கள் விட்டுக்கொடுத்தனர். அதற்கான மாற்று ஒழுங்கு எதுவும் இன்னும் செய்யப்பட வில்லை. ஆனாலும் படையினர் 400 இற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை பிடித்து வைத்துள்ளனர். அவை அனைத்தும் எமது மக்களின் வாழ்வாதாரக் காணிகள்.

மூன்றாவதாக அனல் மின் நிலயத்திற்கு நீர் நிலக்கரி கொண்டு செல்வதற்கான பாதையமைப்புக்கென 49 குடும்பங்களின் காணிகள் எடுக்கப்பட்டன. அவையும் இன்னும் முறையாக மீளக்கையளிக்கப்படவில்லை. ஆனால் மின்நிலயம் கைவிடப்பட்ட நிலையில் அவை மீள வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமன்றி கிளல்வெளி வயல் பகுதியில் சுமார் 200 ஏக்கர் உறுதிக்காணிகளை தற்சமயம் மின்சார சபை வேலிபோட்டு அடைத்துக் கொண்டிருக்கிறது. அவை எமது மக்களின் பூர்வீக உறுதிக் காணிகள். அவையும் உடன் நிறுத்தப்பட்டு குறித்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மேற்படி பிரச்சினைகளை தெளிவுபடுத்தும் வகையில் ஆவணங்கள் ஆயிரத்திற்கும் அதிகமாக சேகரித்து அதற்கான தனித்தனியான கடிதங்களையும் இன்று நாம் மனித உரிமைகள் ஆணைக்குளுவிடம் சமர்ப்பித்துள்ளோம். எனவே மேற்படி பிரச்சினைகளை உடன் தீர்க்க நடவடிக்கை எடுத்து எமது மக்களின் இயல்பான வாழ்விற்கு வழிசமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த கையிளிப்பு நடவடிக்கையில் அங்கிருந்து வந்த 7 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தனர்.