indo lanka fishingஇந்திய கடற்றொழில் அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு இலங்கைக்கு வருகை தந்து 42 இந்திய இழுவை படகுகளை பார்வையிட்டுள்ளனர்.

2015.03.06ம் திகதி இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட 42 இந்திய இழுவை படகுகளை இலங்கை அரசாங்கம் அண்மையில் விடுவித்திருந்தது. இந்த படகுகள் தற்போது இந்தியாவுக்கு கொண்டு செல்லக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காகவே மேற்படி 9பேர் கொண்ட குழு இலங்கை வருகை தந்திருந்தது. நேற்று யாழ்.மாவட்டத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைநகர் பகுதிகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிராஞ்சி பகுதிக்கும் திருகோணமாலை மாவட்டத்திற்கும் சென்று மேற்படி படகுகளை பார்வையிட்டுள்ளது. இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை பார்வையிடுவதற்காக இந்திய கடற்றொழில் அதிகாரிகளுடன் தமிழகத்தின் காரைக்கால், நாகபட்டினம், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த இந்திய கடற்றொழிலளார் சங்கங்களின் தலைவர்களும் வருகை தந்திருந்தனர்.

கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக தங்கள் படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையினால் தங்கள் படகுகள் சேதமடைந்திருப்பதுடன், அதனை இந்தியாவுக்கு மீள கொண்டு செல்வதற்கு பெருமளவு பணம் செலவிட நேரிடும் என இந்திய மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.