northern-முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல்குற்றச்சாட்டுக்களையடுத்து இடம்பெற்ற விசாரணையை அடுத்து விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். அவர்களது இடத்திற்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அனந்தி சசிதரன் மற்றும் ஈபிஆர்எல்எப் கட்சியைச் சேர்ந்த க.சர்வவேஸ்வரன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.இதனைத்தொடர்ந்து வடக்கு அமைச்சரவையை முழுமையாக மாற்றும் நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்திருந்த நிலையில் தமிழரசுக் கட்சி தீர்மானத்திற்கு அமைவாக சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகியிருந்தார். ரெலோ சார்பில் அமைச்சைப் பெற்ற போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் பதவி விலக மறுத்து வருகின்றார்.

இந்நிலையில், டெனீஸ்வரன் அவர்களை கட்சி உறுப்புரிமையில் இருந்து 6 மாத காலத்திற்கு ரெலோ நீக்கியதுடன் அவரது இடத்திற்கு தமது கட்சி சார்பாக விந்தன் கனரட்ணம் அவர்களது பெயரையும் முதலமைச்சருக்கு அனுப்பி வைத்ததுடன் முதலமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி டெனீஸ்வரனை பதவி விலக்குமாறும் தெரிவித்திருந்தது.

சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சுக்களை தொடர்ந்தும் ஒரு வருடத்திற்கு பொருத்தமானவர்களே கையாள வேண்டும் என்ற அடிப்படையிலும், முழு அமைச்சுக்களையும் யாழ் மாவட்டத்திற்கு வழங்கக் கூடாது என்ற அடிப்படையிலும் ரெலோ சார்பில் பரிந்துரைக்கப்பட்ட விந்தன் கனகரட்ணம் அவர்களுக்கு பதிலாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியரான குணசீலன் அவர்களது பெயரை தெரிவு செய்து முதலமைச்சர் ஆளுனருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதேபோல், புளொட் அமைப்பு சார்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த க.சிவனேசன் அவர்களது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆளுனர் கொழும்பில் இருந்து யாழ் வந்ததும் விரைவில் சுகாதார அமைச்சராக வைத்தியர் குணசீலன் அவர்களும், மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக புளொட் அமைப்பின் வடமாகண சபை உறுப்பினர் சிவனேசன்(பவன்) அவர்களும் பதவியேற்கவுள்ளதாக தெரியவருகிறது