சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக பிற்போடப்பட்டு வந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான சட்டம் வரும் அக்டோபர் மாதம் அமுலுக்கு வரவுள்ளதாக கூறினார். இதன்படி சம்பந்தப்பட்ட தேர்தலை வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அளவில் நடத்த முடியும் என்றும், அன்றைய தினம் நடத்த முடியாவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் நடத்த முடியும் என்றும் மஹிந்த தேஷப்ரிய கூறினார். மேலும், தேர்தல் திகதி பிற்போவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றும் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனகூறி, சம்பந்தப்பட்ட தேர்தலை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சகம் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.