D.sithadthanஓன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடாத்துவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கின்ற 20ஆவது திருத்தச் சட்டம் இன்று அவசர அவசரமாக கொண்டு வருவதற்கு என்ன தேவை இருக்கின்றது என்பது புரியவில்லை. ஜனநாயக ரீதியாக ஒரு சபையை உருவாக்க வேண்டுமாகவிருந்தால் மக்களுடைய விருப்பை முதலில் அறிய வேண்டும்.

எனவே, 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்காக இன்னும் சில மாதங்களில் நிறைவடையவிருக்கின்ற கிழக்கு, வட மத்திய, சப்பிரகமுவ மாகாணசபைகள் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதுடன், இந்த இரண்டு வருடங்களில் அந்த மாகாண சபைகளினுடைய ஆட்சி ஆளுநரின் கீழ் நடைபெறப்போகின்றதா? அல்லது வேறு வழிகள் ஏற்படுத்தப்படுமா? என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சபையினுடைய நிர்வாகத்தை இரண்டு வருடங்களுக்கு ஆளுநரிடமோ அல்லது பாராளுமன்றத்திடமோ கொடுப்பது என்பது ஜனநாயகத்துடன் ஒப்பிடக்கூடிய வேலையாகத் தெரியவில்லை.

மாகாணசபை ஒன்று கலைக்கப்பட்டால் உடனடியாகத் தேர்தலை நடத்தி மக்களுடைய விருப்பை அறிந்து அவர்களுடைய முடிவுக்கு ஏற்ப நிர்வாகத்தை உருவாக்குவதே சிறந்தது. அதனைத் தான் கூட்டமைப்பும் விரும்புகிறது. தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கின்ற திருத்தத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பெரும்பான்மையினருடைய ஆட்சியில் இருக்கும் மாகாண சபைகளிலேயே இந்த திருத்தம் தோற்கடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழர்களுடைய ஆட்சியின்கீழ் இருக்கும் மாகாண சபைகளிலும் இது தோற்கடிக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  (நன்றி – தினக்குரல் 03.09.2017)