Sharjahசார்ஜாவிலுள்ள ஒரு ஹோட்டல் அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்று இலங்கையர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த குடியிருப்பில் இருந்த இரு ஆண்கள், பெண்கள் மூவர் தற்கொலை செய்ய முற்பட்டதில், இரு பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, 55 வயதான தந்தை, 54 வயதான தாய் மற்றும் அவர்களது 19 வயதான மகனும் சம்பவத்தில் பலியானதோடு, அவர்களது உறவினர்களாக கருதப்படும் இரு பெண்களே காப்பாற்றப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் இலங்கையர்களாகும். மேலும், காப்பாற்றப்பட்ட இரு பெண்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கடந்த ஆகஸ்ட் 29ம் திகதி அதிகாலை 02.30 அளவில் ஆணொருவர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்வதை அறிந்த மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த நபர் அதே அடிக்குமாடியில் குடியிருப்பவர் என அடையாளம் கண்டு கொண்டு, குறித்த வீட்டுக்கு சென்றனர்.
இதன்போது, வீடு உட்பக்கம் பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது, மூன்று பெண்கள் தங்களது மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் மிதப்பதையும், அருகில் இளைஞர் ஒருவரின் சடலம் வெள்ளை துணியால் மூடப்பட்டிருப்பதையும் கண்டுள்ளனர்.
அத்துடன், ஒருமேசையில் பல வித்தியாசமான மருந்துகள், சிவப்பு நிற நீர் அடங்கிய கோப்பைகள் உள்ளிட்ட பொருட்களும் இருந்துள்ளது.
இதற்கமைய, சம்பத்தில் பலியான இளைஞர் முதலில் தற்கொலை செய்திருக்கலாம் எனவும், அதனையடுத்து மூன்று பெண்களும் தற்கொலைக்கு முயன்றுள்ளதோடு, இறுதியாக ஆண் மாடியில் இருந்து குதித்திருக்கலாம் எனவும், சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இது திட்டமிட்ட தற்கொலை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்தக் குடும்பம் கடந்த ஒருவருட காலமாக அந்த குடியிருப்பில் இருப்பதாக, சம்பந்தப்பட்ட குடியிருப்பு முகாமைத்துவ பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், அண்மையில் வீட்டு உரிமையாளரை சந்தித்த அப் பெண், தங்க வடிவமைப்பாளராகவுள்ள தனது கணவருக்கு மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்கப் பெறவில்லை எனவும், அதனால் தாம் பொருளாதார ரீதியில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாகவும், எனவே, வாடகையை குறைக்குமாறும் கோரியுள்ளார்.
இதனையடுத்து, அதுவரை 6,250 டிர்ஹாம் செலுத்தி வந்த அவர்களுக்கு 5, 750 டிர்ஹாம் செலுத்துமாறு வீட்டு உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதுஇவ்வாறு இருக்க, தற்கொலைக்கு முயன்று பாதிக்கப்பட்டவர்களை வெளியே அழைத்து வருகையில் உயிருடன் இருந்த பெண் ஒருவர் ‘நான் ஏன் இன்னும் வாழ்கிறேன்’ என, அழுததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என, வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.