peravaiஇனப் பிரச்சினைக்கான தீர்வானது இந்த இனப் பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இணங்கண்டு நிரந்தரமாக தீர்ப்பதாக அமைய வேண்டும் என தமிழ் மக்கள் பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் அரசியல் தீர்வு அடிப்படையிலான இலங்கையின் உத்தேச அரசியலமைப்பின் முயற்சி எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலும் பிரகடன வெளியீடும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

அந்த கலந்துரையாடலின் போதே தமிழ் மக்கள் பேரவையின் பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, மதச்சார்பற்ற சமஷ்டித் தீர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்பதோடு, இலங்கைத் தீவின் கௌரவமும் சமாதானமும் மதிக்கப்பட்டு சகல இனங்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்தவும் வல்லது. இது தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசை என்பதும் பல தசாப்தங்களாக தேர்தல்களில் வழங்கிய ஆணைகள், திம்பு பிரகடனம் போன்ற சர்வதேச பிரகடனங்கள், பொங்குதமிழ், எழுக தமிழ் போன்ற மக்கள் எழுச்சி நிகழ்வுகள் மூலமும் மிகத் தெளிவாக பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்ட ஜனநாயக விருப்பும் ஆகும்.

இணைந்த வடகிழக்கில் தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமை அங்கிகரீக்கப்பட்டு அதன் தனித்துவமான இறைமையின் அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பது விட்டுக்கொடுக்கமுடியாத அடிப்படை அரசியல்கோரிக்கை என்பதும் இலங்கை இனப்பிரச்சினைக்கான எந்த தீர்வும் இதன் அடிப்படையிலேயே அணுகப்படுவதே நேர்மையானதும் நீடித்து நிலைக்கக்கூடியதும் ஆகும்.

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயத்தில் ( திட்டமிட்ட அரச குடியேற்றங்களால் குடியேற்றப்படட்டவர்கள் நீங்கலாக) இயற்கையாகவே வாழும் முஸ்லீம், சிங்கள மக்களும் இந்த சமஷ்டி அலகின் சகல உரிமைகளுக்கும் உரித்தானவர்கள் இணைந்த வடகிழக்கு முஸ்லீம் மக்கள் தமக்கான அரசியல் அதிகார அலகை கோருவதற்கான உரிமைக்கு உரித்துடையவர்கள்.

இலங்கையின் உத்தேச அரசியலமைப்பானது, மலையக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள், அடிப்படைத் தேவைகள் என்பவற்றை திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும். இதற்கான குரலையும் தோழமை உறுதிப்பாட்டையும் நாம் என்றும் வழங்குவோம்.

கடந்த எழுபது ஆண்டுகளாக தமிழர்கள் மீது திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையில் இருந்து எமது இனத்தின் இருப்பை பாதுகாத்துக்கொள்ளவம் மேற்கூறிய அரசியல் கோரிக்கைகள் அங்கிகரிக்கப்பட வேண்டும்.

அத்தோடு சர்வதேச நீதிமன்றம் அல்லது ஐ.நா மேற்பார்வையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் போன்ற சுயாதீன சர்வதேச குற்றவியல் நீதி விசாரணைப்பொறிமுறை மூலம் இந்த இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

எமது அரசியல் தீர்வுக்கான கோரிக்கையும், இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும் விட்டுக்கொடுப்புக்கோ தம்மிடையே பதிலீட்டுக்கோ உரியவை அல்ல. இவை இரண்டும் பூர்த்தி செய்யப்படுவதன் மூலமே இயற்கை நீதியின் அடிப்படையில் தமிழர்களுக்கான நியாயம் கிடைக்கும். அரசியல் தீர்;வு குறித்தும் பொறுப்புக்கூறல் குறித்தும் சர்வதேச அரங்குகளில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, அவற்றைப் பூர்த்தி செய்யாது, காலத்தை இழுத்தடித்து ஏமாற்றுவதே சிறிலங்கா அரசு காலம் காலமாக மேற்கொண்டு வரும் நடைமுறையாகும்.

சர்வதேச நெருக்குவாரங்களில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கான ஒரு யுக்தியாகவே இந்த பொய் வாக்குறுதிகளை வழங்குவதனையே சிறிலங்கா அரசாங்கங்கள் தம் வழக்கமாக கொண்டுள்ளன. அந்த வகையில், இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்விதத்திலும் தம்மை வேறுபடுத்தவில்லை.

இந்த அரசாங்கமானது 2015,2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமை பேரவையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும் நேர்மையான முறையில் ஐ.நா பேரவையில் வலியுறுத்தப்பட்டது போன்று பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை உள்ளீர்த்து பூர்த்தி செய்யவில்லை. மாறாக, சர்வதேசத்தை ஏமாற்றும் பெயரளவிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையே முற்கொண்டு செல்கிறது.

உலகின் உயர்சபையாகிய ஐ.நாவின் மனித உரிமை பேரவையினதும் மற்றும் ஜனநாயக செயன்முறைகளில் நம்பிக்கை கொண்டுள்ள நாடுகளினதும் கௌரவத்தை மதிப்பிழக்கச் செய்யும் வகையிலும் அவற்றிற்கு சவால் விடுமு; வகையிலும், ஐ.நா மனித உரிமை பேரவையில் குறிப்பிட்ட சர்வதேச நீதிபதிகள், பங்கரவாத தடைச்சட்ட நீக்கம் போன்றவற்றை அப்பட்டமாகவே மறுதலித்து தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகார உயர்பீடத்தினரான ஜனாதிபதி, பிரதமர் கௌரவ அமைச்சரவை ஆகியோர் வெளிப்படையாகவும், உத்தியோகபூர்வமாகவும் கருத்துக்கள் வெளியிட்டுவருவது குறித்து சர்வதேச சக்திகள் தமது தீவிரமான கரிசனையை செலுத்த வேண்டும்.

பொறுப்புக்கூறலில் மட்டுமல்லாது, தமிழ் மக்களின் அரசியல் விருப்பை, புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கலந்தாய்வுக்குழுவுக்கான சமர்ப்பணம் உட்பட பலதடவைகளில் மக்கள் வெளிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றையெல்லாம் ஒரேயடியாக புறந்தள்ளுவதாகவே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கலந்தாய்வுக்குழு தலைவர் மற்றும் உத்தேச அரசியலமைப்பை வரையும் பிரமுகர்களின் கருத்துக்கள் இருக்கின்றன.

அரசாங்க உயர்பீடத்தின் உத்தியோகபூர்வ மறுதலிப்புக்கள், இந்த அரசாங்கத்துக்கும் தமிழர்களின் அரசியற் பிரச்சினையை தீர்ப்பதும் குறித்தோ அல்லது நேர்மையான பொறுப்புக்கூறல் குறித்தோ உண்மையான அரசியல் விருப்பு இல்லை என்பதனை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதாலும் நடைமுறை அனுபவத்தில் சிறிலங்கா அரசின் முன்னெடுப்புக்கள் மீது தமிழர்கள் நம்பிக்கையை இழந்திருப்பதாலும் சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் தமது நேரடித் தலையீட்டை தாமதமின்றி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை, மேலே பிரகடனப்படுத்தப்பட்ட மக்களது விருப்புக்களின் அடிப்படையில் வழங்க வழிவகை செய்ய வேண்டுமென்றும் பிரகடனத்தில் வலியுறுத்தியுள்ளனர்.