thilak marapana indian prime ministerஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி திலக் மாரப்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று புதுடில்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அமைச்சர் திலக் மாரப்பன இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்திகளை இந்திய பிரதமருக்கு எடுத்துரைத்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைகும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என இதன்போது அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்பட்ட பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்திற்காக இந்தியாவை தெரிவுசெய்தமை தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன்,இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு இதன் மூலம் பலப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராகவிருப்பதாகும் இந்திய பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தெவோல் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.