bavanதேசிய ரீதியில் விவசாய வாரம் எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பமாகி ஒருவார காலம் அனுஸ்டிக்கப்படவிருக்கும் நிலையிலும், இதனையொட்டி எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட நிகழ்வொன்று நடைபெறவிருக்கும் நிலையிலும், மாகாணங்களின் விவசாய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றுபிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர் ஹரிசன் உள்ளிட்டவர்களும், மாகாண அமைச்சர்களில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் தவிர்ந்த ஏனைய அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது விவசாயம் தொடர்பான பல்வேறு விளக்கங்கள் ஜனாதிபதியினால் அளிக்கப்பட்டது. இதன்படி தேசிய விவசாய வாரத்தினை முன்னிட்டு ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வேலைத்திட்டம் செற்படுத்தப்படவிருக்கிறது. யாழில் நடைபெறும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாளில் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த சந்திப்பினைத் தொடர்ந்து வட மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்கள் ஜனாதிபதி அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது அவர்

விவசாய திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் போன்றவற்றில் தமிழ் மொழி மூலமான விவசாய ஆசிரியர்கள், விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பல மட்டங்களில் மிகக் கூடுதலாக வெற்றிடங்கள் காணப்படுவதையும் அவற்றை நிரப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இதற்காக தனியானதொரு பொறிமுறைகளை கையாண்டு தமிழ் மொழி மூலமான நபர்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்பதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன் நிர்வாக தொழில்துறையில் பாவனைக்கு வாகனங்களின் தேவையுள்ளது.

தங்குமிட விடுதிகள் அமைக்கப்படல் வேண்டும், பயிற்சிக் கல்லூரிகள் புனரமைக்கப்படல் வேண்டும். சிறு குளங்கள் புனரமைக்கப்படல் வேண்டும். வட்டக்கச்சி பண்ணை, இரணைமடு சேவை மையம் போன்றன மக்கள் மற்றும் விவசாயிகள் பாவனைக்காக விடுவிக்கப்பட வேண்டும். பெரும்போகம் சிறுபோகம் வறட்சியாலும் குளங்களைத் திருத்துவதாலும் சரியான விளைச்சலை கொடுக்கவில்லை என்பதால் விதைநெல்லை இலவசமாக அல்லது மானியத்தில் வழங்க வேண்டும். நவீன தொழில்நுட்ப இயங்கிரங்கள் தூவல் பாசனம் அது சார்பான பயிற்சிகள் வழங்குதல் வேண்டும். பழுதடைந்துள்ள உழவு இயந்திரங்களை திருத்துதல், மரக்கரி பழங்களை சேமித்துப் பாதுகாத்தலுக்கான நிலையங்களை அமைத்தல் வேண்டும் போன்ற தேவைகளையும் ஜனாதிபதி அவர்களிடம் எடுத்துக் கூறினார்.

இந்த விடயங்களில் கவனமெடுப்பதாகக் கூறிய ஜனாதிபதி அவர்கள், இவற்றைக் கவனத்திற் கொள்ளுமாறு விவசாய அமைச்சருக்கு பணிப்புரை வழங்கினார்.