யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை, வருடத்துக்கு வருடம் அதிகரித்துள்ளதாக, வட மாகாண சபையின் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட அந்த கணிப்பீட்டின் பிரகாரம், இரண்டு மாவட்டங்களிலும் 2009ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 124 ஆகும்.
2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 141 பேரும், 2012ஆம் ஆண்டு 153 பேரும் 2013ஆம் ஆண்டு 158 பேரும், 2014ஆம் ஆண்டு 157 பேரும், 2015ஆம் ஆண்டு 139 பேரும் 2016ஆம் ஆண்டு 179 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதேவேளை, இவ்வாண்டு ஜூலை 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 151 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும் அந்த கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கூடுதலானவர்கள் பெண்கள் என்றும் அந்த கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் 40 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே அடங்குகின்றனர் என்றும் அந்த கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியான சூழலில் வாழமுடியாக நிலைமையின் காரணமாகவே, பெண்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில், தன்னுடைய கணவன் மற்றும் உறவினர்கள் மரணமடைந்தல், சகல சொத்துகளும் யுத்தத்தில் நாசமடைந்தல், ஆகியனவே, இவ்வாறான நோக்கத்துக்கு அவர்களை இட்டுச்சென்றுள்ளது என்றும் அறியமுடிகிறது.
இதேவேளை, யுத்தத்தால் ஏற்பட்ட மனவழுத்தத்துக்காக, ஓர் உளவியல் திட்டத்தை முன்னெடுப்பதற்கு, நடவடிக்கை எடுக்காமையும், இவ்வாறான நோக்கத்துக்கு அவர்களை இழுத்துச் சென்றுள்ளது என்றும் அந்தக் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அவ்விரு மாவட்டங்களும் உளவியல் திட்டமொன்றை உடனடியாக முன்னெடுப்பதற்கும் மற்றும் ஆலோசனை வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த கணிப்பீட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.