மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் பிரதேசத்தில் நீண்டகாலமாக வீதியின் ஒரு பகுதி புனரமைக்கப்படாமையைக் கண்டித்து, பொதுமக்கள், இன்றுகாலை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாமாங்கம், சகாயமாதா ஆலய வீதியின் ஒரு பகுதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையால் குறித்த வீதியால் பயணம் செய்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். சகாயமாதா ஆலய வீதியின் சுமார் 200 மீற்றர் வரையான பகுதிகள் கடந்த காலத்தில் செப்பனிடப்பட்டபோதிலும் 100 மீற்றர் வரையான பகுதிகள் செப்பனிடப்படாத நிலையில் இருப்பதாக, பிரதேச மக்கள் தெரிவித்தனர். குறித்த வீதியுடாக பிரசித்திபெற்ற சகாயமாதா ஆலயம் மற்றும் மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு மாணவர்களும் பொதுமக்களும் பயணம் செய்கின்ற நிலையில் மழை காலங்களில் குறித்த வீதியூடாக பயணிக்கமுடியாத நிலையிருப்பதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த வீதியினை புனரமைத்து தருமாறு அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுசென்றபோதிலும் இதுவரையில் அதனை புனரமைக்க யாரும் நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.