வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டுமென்பதுடன், தற்போதுள்ள வாய்ப்புக்களை தவறவிட்டு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நழுவ விட்ட வாய்ப்புக்களை பற்றி யோசிக்க கூடாது என்பதே எனது யோசனையாக உள்ளதென சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் சகவாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் அரசசார்பற்ற நிறுவனங்களை சகவாழ்வுப் பாதையில் இணைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (16.09) இடம்பெற்றது.அந்த கலந்துரையாடலின் பின்னர் புதிய அரசியலமைப்பு மற்றும் தற்போதைய அரசியல் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது.
அந்த சந்திப்பின் போதே புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பு விடயங்கள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன. இனிமேலும் தாமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். அரசியல் கட்சிகள் சில தமது யோசனைகளை எழுத்து மூலம் தந்துள்ளன. அரசியலமைப்பின் வழிகாட்டல் குழு முழுவதனையும் தொகுத்து எதிர்வரும் 21ம் திகதி அரசியலமைப்புப் பேரவைக்கு வழங்க வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் அவற்றினை ஆய்வு செய்து 2/3 பெரும்பான்மையினை நிறைவேற்றிக்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டுமென்பதே பயணப்பாதை என நினைக்கின்றேன். சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி என்ற யோசனைகள் உள்ளன. ஒருமித்த நாடு என்று பயன்படுத்த வேண்டுமென்ற யோசனையும் இருக்கின்றது.
பல்வேறுபட்ட யோசனைகள் உள்ளன. அதில் வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென்ற யோசனைகளும் உள்ளன. அதேவேளை, இந்த நாடு பௌத்த சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென்ற யோசனைகள் உள்ளன. தற்போதுள்ள அரசியலமைப்பு யாப்பு பாதுகாக்கப்பட்டு, அப்படியே வழங்கப்பட வேண்டுமென்ற யோசனையும் உள்ளது. வழிகாட்டல் குழுவினைப் பொறுத்தவரையில் எந்த முடிவும் எடுக்க முடியாது. வரும் அனைத்து யோசனைகளையும் தொகுத்து அப்படியே அரசியலமைப்புப் பேரவைக்கு வழங்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த நாடு சமஷ்டி நாடாக அறிவிக்கப்பட வேண்டும். மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. ஆனால் நடைமுறையில் அதற்கான சாத்தியமில்லை.
கடந்த கால வரலாற்றினை எடுத்துப் பார்க்கும் போது, தமிழ் மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களை எல்லாம் இழந்துள்ளோம். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட யோசனையை துரதிஷ்டவசமாக கைநழுவி விட்டோம்.
2000 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நாட்டை பிராந்தியங்களின் ஒன்றியம் என்று கொண்டுவந்த (ஏறக்குறைய சமஷ்டி என்ற) அரசியலமைப்பைக் கூட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் தீ வைத்துக் கொழுத்திய போது கூட பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருந்தும், தமிழ் விடுதலைக் கூட்டணியின் வாக்குகள் இருந்த போதும் அவற்றினைத் வழங்காமால், அந்த முன் யோசனைகளைப் புறக்கணித்துள்ளோம். அதனையும் கைதவற விட்டோம்.
2005 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வரக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஒஸ்லோ புரிந்துணர்வு அடிப்படையில் பதவிக்கு வந்திருந்தால், சமஷ்டி தரக்கூடிய வாய்ப்பு சர்வதேச அழுத்தங்களின் மத்தியில் இருந்த போது, யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் அவருக்கு வாக்களிக்க விரும்பாத காரணத்தினால் அதுவும் தவறிப் போய்விட்டது.
அதனடிப்படையில், தற்போது, (2017) ஆம் ஆண்டு புதிய யோசனைகள் வந்திருக்கும் போது, கடந்த பல அரசியலமைப்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அனைத்தையும் விட மிகக்குறைவான யோசனைகளாக இருக்கின்றன.
இந்த வாய்ப்புக்களையும் தவறவிடுவோமானால், 2020ம் ஆண்டு வரப்போகும் யோசனைகளின் போது, 2017 ஆம் ஆண்டு வந்த யோசனைகளைத் தவறவிட்டு விட்டோமே என்று வருந்தக் கூடாது என நினைக்கின்றேன். அதனால், தற்போது தரப்படும் யோசனைகளை இறுகப்பற்றிக்கொண்டு எம்மைக் காத்திரமாக திடப்படுத்திக்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பதே எனது இலக்காக உள்ளது என்றார்.