sfdsfdsdfds(எம்.எம்.மின்ஹாஜ்)

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டமையினால் சபைக்குச் சமூகமளிக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேடிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரளிப்பதில்லை என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எ.எவ், புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர். இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளரும் உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் சட்டமூலத்திற்கு எதிராக பேசிவிட்டு சபையில் இருந்து வெளியேறியிருந்தார். இதேபோன்று புளொட் அமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனும் வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்தார்.

இந்த நிலையில் புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் நேற்று மாலை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எங்கு இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். தான் யாழ்ப்பாணத்தில் நிற்பதாக சித்தார்த்தன் தெரிவித்ததையடுத்து விசேட ஹெலிகொப்டர் ஒன்றினை அனுப்பினால் உடனடியாக பாராளுமன்றத்திற்கு வரமுடியுமா என்று பிரதமர் அவரிடம் கேட்டுள்ளார். இதேபோன்று வேறுசில எம்.பி க்களையும் தொடர்புகொள்ள பிரதமர் முயன்றதாக தெரிகின்றது.

இதேவேளை மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் நேற்றுப் பல திருத்தங்கள் செய்யப்பட்டமையினால் சட்டமா அதிபரும் அரசாங்க சட்டவரைஞர்களும் காலை முதல் இரவு வரை பாராளுமன்றத்திலேயே இருந்துள்ளனர். சிறுபான்மை கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களும் இவர்களினால் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளான தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் திருத்தங்களுக்கு இணக்கம் தெரிவித்த பிரதமர் மலைய மக்களுக்கோ அல்லது சிறுபான்மையின மக்களுக்கோ பாதிப்பு ஏதேனும் ஏற்படுமானால் அவ்விடயம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயத்தில் இந்த மூன்று கட்சிகளின் தலைவர்கள் உட்பட அந்தக் கட்சியைச் சேர்ந்த 18 எம்.பி க்களும் உறுதிப்பாட்டுடன் நின்றமையினால் உரிய திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது நமக்கு கிடைத்த வெற்றி என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

(நன்றி : வீரகேசரி 21.09.2017)