akkarai villageயாழ். வலிகாமம் மேற்கு, இடைக்காடு, அக்கரை கிராம மக்களின் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அக்கரை கடற்கரைப் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியை மூடுமாறு வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அக்கரை கடற்கரை சுற்றுலா மையம் கடந்த 2016 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இந்த சுற்றுலா மையம் கலாசார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகத் தெரிவித்து நேற்றுமுன்தினம் மாலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுற்றுலா மையத்தை சிறுவர் மையமாக மாற்றுமாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, உரிய நடைமுறையின்படியே குறித்த சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் அனுமதியுடன் இந்த மையம் அமைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.