அமெரிக்காவுக்குள் நுழைய ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட சில நாடுகளுடன் தற்போது மேலும் மூன்று நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிப்பதாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். பெரிதும் விமர்சிக்கப்பட்ட டிரம்ப்பின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் பலர் முறையிட்டனர்.
கீழமை நீதிமன்றங்களில் டிரம்ப் உத்தரவுகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் இந்த உத்தரவை அனுமதித்தது. வணிகம், கல்வி போன்ற பணிகளுக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களை அனுமதிக்கலாம் என்றும் அமெரிக்காவில் இருக்கும் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் மிக நெருக்கமான உறவினர்களை அனுமதிக்கலாம் என்றும் பின்னர் பயணத்தடையில் மாற்றம் செய்யப்பட்டது.
இதன் பின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான், ஈராக் நாடுகள் விலக்கப்பட்டன. இந்நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பயணத்தடை பட்டியலில் புதிதாக வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள சாத் ஆகிய நாடுகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.
வடகொரியா உடன் ஏற்கனவே உள்ள இராணுவ ரீதியிலான பகை சற்றும் குறையாத நிலையில் இந்த தடை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. முன்னதாக, அமெரிக்கர்கள் எவ்வித காரணத்திற்காகவும் வடகொரியா செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டது நினைவு கூறத்தக்கது. பட்டியலில் வெனிசுலா இடம் பெற்றாலும், அந்நாட்டு அரசு அலுவலர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே இந்த தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு தலைவர் மதுரோ உடன் தற்போது டிரம்ப் மோதலை கடைப்பிடித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. “பாதுகாப்பான அமெரிக்காவை உருவாக்குவதே எனது முதல் பணி” என தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பயணத்தடை குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார் என, வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.