நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சேவையிலிருந்து இடைவிலகப்பட்டுள்ள வட மாகாணத்தின் 05 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியிலுள்ள 2,100 பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சேவையிலிருந்து இடைவிலக்கப்பட்டமை தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு முயற்சித்ததாகவும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். எனினும், வட மாகாண சுகாதார அமைச்சரையும் மீறி அமைச்சின் செயலாளர், பழிவாங்களை அடிப்படையாக கொண்டு செயற்படுவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கமைய இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
தீர்வு காணும் வரை டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை இடையூறின்றி முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதற்கு இணக்கம் தெரிவிக்காவிடினும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் எனவும் டொக்டர் ஜயசுந்தர பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.