provincial councialசப்ரகமுவ, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ளன. இதற்கமைய, சப்ரகமுவ மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைகின்றது.

மேலும், தற்போதைய நிலவரங்களின்படி, குறித்த மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநர் வசம் ஒப்படைக்கப்படலாம் என தெரியவந்துள்ளது. 2012ம் ஆண்டு ஜூலை 25ம் திகதி சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்பட்டு, அதேவருடம் செப்டம்பர் 8ம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 28 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்ததோடு, 14 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியானது. மேலும், இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் சார்பாக இருவர் வெற்றி பெற்றனர். இதேவேளை, கிழக்கு மாகாண சபை எதிர்வரும் சனிக்கிழமையும், வட மத்திய மாகாணசபை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடனும் கலைகின்றன.

இதேவேளை சப்ரகமுவ மாகாண சபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவுக்கு வருவதையடுத்து, இன்று நள்ளிரவு முதல் அதன் நிர்வாகத்தைத் தான் பொறுப்பேற்கவுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா தெரிவித்துள்ளார். தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு அதில் தெரிவாகும் புதிய மாகாண சபை உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கும் வரை அம்மாகாண நிர்வாகம் தன் பொறுப்பில் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.