vidyaபுங்குடுதீவு மாணவி சி.வித்தியா கடத்தப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டத்தின்படி புங்குடுதீவு மாணவி சி.வித்தியாவை கடத்தி கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கினை விசாரிக்க தீர்ப்பாய நீதிமன்றம் நியமிக்கப்பட்டது. இந்த மன்றின் நீதிபதிகளாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய 3 தமிழ் பேசும் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட குற்றப் பகிர்வுப் பத்திரத்தில் 9 எதிரிகள் மீதும் 41 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் 43 சாட்சிகளும், 27 சான்றுப் பொருட்களும் வழக்குத்தொடுனர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டத் தொகுதியில் உள்ள 3 ஆவது மாடியில் உள்ள பிரத்தியோக இடத்தில் அமைக்கப்பட்ட தீர்ப்பாய மன்றில் நடைபெற்ற விசாரணைகளை பிரதி மன்றாடியார் நாயகம் குமார்ரட்ணம் மற்றும் நாகரட்ணம் நிஷாந், மாலினி விக்னேஸ்வரன் ஆகிய அரச சட்டவாதி குழுவினர் நெறிப்படுத்தியிருந்தனர். இதன்படி வழக்கு விசாரணைகளில் முதலில் அரச தரப்புச் சாட்சியப் பதிவுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து எதிரி தரப்பின் சாட்சியப் பதிவுகள் நடைபெற்றன.

மன்றின் சாட்சிக் கூட்டில் வைத்து நெறிப்படுத்தப்பட்ட அனைத்து சாட்சிகளும் எதிர் தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்க விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி கடந்த 12 ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது 9 எதிரிகள் சார்பிலும் மன்றில் தோன்றிய மகிந்த ஜெயவர்த்த, ரகுபதி மற்றும் கேதீஸ்வரன் ஆகியோர் தொகுப்புரைகளை மன்றில் வழங்கினர். அனைத்து சாட்சியப் பதிவுகளும் நிறைவடைந்த பின்னர் வழக்குத் தொடுனர் தரப்பின் சார்பில் வழக்கினை நெறிப்படுத்திய பிரதி மன்றாடியார் நாயகம் குமார்ரட்ணத்தின் தொகுப்புரை இடம்பெற்றது.

தொகுப்புரைகளின் முடிவில் தீர்ப்பாய மன்றின் நீதிபதிகளால் தீர்ப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டது. இதன்படி நாளை புதன்கிழமை திறந்த நீதிமன்றத்தில் வைத்து இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. இதன்போது வழக்கின் 9 எதிரிகளையும் மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கின் எதிரியாக இருந்து அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளவரும், வழக்கின் 5 ஆவது சாட்சியாளருமான உதயசூரியன் சுரேஸ்கரனையும் தீர்ப்பு அறிவிக்கும் தினத்தில் மன்றில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகருக்கு மன்று பணித்துள்ளது. உயிரிழந்த வித்தியாவின் தாயாரான சி.சரஸ்வதியையும் தீர்ப்பு அறிவிக்கும் தினத்தில் மன்றில் தோன்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.