rohinja muslimsகல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மார் அகதிகள் 31பேரும் பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள வீட்டை பௌத்த பிக்குகள் நேற்று சுற்றிவளைத்ததை அடுத்து அங்கு பதற்றமான நிலை தோன்றியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் குடியேறிகளுக்கான அமைப்பின் பராமரிப்பில் கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு வீடொன்றில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 ரோஹிஞ்சா அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி காலை காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து 30 மியன்மார் அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்த நிலையில் யாழ் பிரதான சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டனர். இதன்போது அவர்களுள் ஒருவருக்கு குழந்தையொன்றும் பிறந்து 31 அகதிகளாகினர். பின்னர் அவர்களை மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்குமாறு கடந்த மே மாதம் 02ம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்கமைய இவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் குடியேறிகளுக்கான அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் தங்கவைத்ததாக, மியன்மார் அகதிகளுக்காக நீதிமன்றில் வாதிட்டுவரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தெரிவித்தார். இவர்கள் குறித்த பிரதேசத்தில் தங்கியிருப்பது தொடர்பாக கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு கல்கிஸ்ஸ பொலிஸார் பதில் கடிதம் அனுப்பியிருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒன்று கூடிய பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர், மியன்மார் அகதிகளை தீவிரவாதிகள் என்றும், சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருப்பதாகவும், ஆகவே அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் சத்தமிட்டனர்.

எவ்வாறாயினும் சட்டவிரோதமான முறையில் ரோஹிங்யா முஸ்லிம்கள் எவரும் நாட்டில் தங்க வைக்கப்படவில்லை என்றும், சிலர் அரசியல் நோக்கத்திற்காக பொய்ப்பிரச்சாரங்கள் மேற்கொள்வதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட அசாதாரண நிலையினால் மியன்மார் அகதிகளின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, அவர்கள் பூஸ்ஸ தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.