மியான்மாரிலிருந்து இங்கு வருகைதந்துள்ள றோகிஞ்சா அகதிகளை நாடுகடத்துமாறும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்குமாறும் கோரி, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் காரியாலயத்தில் மகஜர் ஒன்று நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.
சிங்கலே தேசிய சக்தி உள்ளிட்ட அமைப்புகள் பல இணைந்தே, இந்த மகஜரைக் கையளித்துள்ளனர். அந்தக் காரியாலயத்துக்கு முன்பாக காத்திருந்த பிரிவினர், அலுவலக அதிகாரியொருவரிடம் மகஜரை கையளித்ததன் பின்னர், அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் காரணமாக, அங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, கல்கிஸை பொலிஸாரின் பொறுப்பின் கீழ், செவ்வாய்க்கிழமை (26) கொண்டுவரப்பட்ட, மியான்மர் றோகிஞ்சா அகதிகள் 31 பேரும் காலி பூஸா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அகதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த கல்கிஸை பிரதேசத்தில் உள்ள நிலையத்துக்கு முன்பாக, பௌத்த தேரர்கள் சிலர் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையிலேயே, அந்த 31 பேரையும், பொலிஸார் தங்களுடைய பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்தனர்.
இதனையடுத்து, கல்கிஸை நீதிமன்ற நீதவானின் பரிந்துரைக்கு அமைவாகவே. அவர்கள் அனைவரும் பூஸா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, கல்கிஸையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியான்மார் அகதிகளுக்கு எதிராக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.