kurdsஈராக்கிலிருந்து குர்திஸ்தான் பிரிந்து செல்வதை ஆதரித்து 92 வீதமானோர் வாக்களித்துள்ளனர். குர்திஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்பில் 72.61 வீதமானவர்கள் கலந்துகொண்டு, வாக்களித்துள்ளனர்.

குர்திஸ்தான் பிரிவிற்கு 2,861,000 பேர் ஆதரவாகவும் 224,000 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த வாக்கெடுப்பானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என ஈராக் தெரிவித்துள்ளது. ஈராக்கின் வட பகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். குர்திஸ்தான் என்றழைக்கப்படும் இந்தப் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயற்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்துகள் வசிக்கும் இந்த பகுதியை தனிநாடாக அறிவிக்க அம்மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குர்துக்கள் தொழிலாளர் கட்சியினர் ஆயுதமேந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்துவிட்டது. ஈராக் துண்டாகப் பிரிவதை அனுமதிக்க மாட்டேன் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி தெரிவித்துவிட்டார். எவ்வாறாயினும், தனி நாடு கோரி பொது வாக்கெடுப்பு நடத்த குர்து மக்கள் முடிவெடுத்தனர். பரபரப்பான சூழ்நிலையில் நேற்று பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இர்பில் மற்றும் கிர்கக் நகருக்கு அதிகமான மக்கள் திரளாகச் சென்று உற்சாகமாக வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் கணிசமான அளவில் குர்து இனத்தவர்கள் வசித்து வருவதால், ஈராக் குர்துக்களின் தனிநாடு கோரிக்கை சிரியா மற்றும் துருக்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என துருக்கி அச்சம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.