புத்த மதத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் புதிய யாப்பில் நீக்கப்பட மாட்டாது. ஒற்றையாட்சி அல்லாத அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க இடமளிக்கப்படாது என்றும், தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் புத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் நீக்கப்படாது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பாறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி , புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பாக, விசேட நாடாளுமன்ற தேர்வு குழு ஒன்று அண்மையில் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததாகத் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கப்படவுள்ளதாகவும், தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் புத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் நிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்து சில பௌத்த பிக்குகள் அறிக்கைகளை விடுத்துள்ளனர்.
இது முற்றிலும் தவறான ஒரு கருத்து என்று கூறிய ஜனாதிபதி , புதிதாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பு ஒற்றையாட்சி முறைக்கு அப்பால் சென்று உருவாக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறினார்.
அதேபோன்று தற்போதைய அரசியல யாப்பின் கீழ் புத்த மதத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் நீக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பின் கீழ் தற்போது மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை விட, கூடுதல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது