spainஸ்பெயினில் இருந்து காட்டலோனியா மாகாணத்தை பிரித்து தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக 90 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக காட்டலோனியா திகழ்கிறது. வட கிழக்கு ஸ்பெயினில் செழிப்பான இந்த மாகாணத்திற்கு கூடுதல் சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், ஸ்பெயின் அரசியல் சட்டம் அதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.அங்கு கடந்த 5 ஆண்டுகளாக தனி நாடு கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமா அல்லது ஸ்பெயினுடன் இணைந்தே இருக்கலாமா என்பது பற்றி பொதுமக்களின் கருத்தறியும் வகையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஸ்பெயின் அரசும், அரசியலமைப்பு நீதிமன்றமும் இதற்கு அனுமதிக்காததால், வாக்கெடுப்பை முறியடிக்க பொலிசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். சில இடங்களில் ஓட்டுப்பெட்டிகளையும், வாக்குச் சீட்டுகளையும் கைப்பற்றினர். சில இடங்களில் வாக்களிக்க வந்தவர்களிடம் அத்துமீறி நடந்தனர்.

எனவே, வாக்காளர்கள் எந்த வாக்குச்சாவடிக்கு வேண்டுமானாலும் சென்று வாக்கு அளிக்கலாம் என காட்டலோனியா மாகாண அரசு கூறியது. இதனால் வாய்ப்பு கிடைத்த இடத்தில் மக்கள் வாக்களித்தனர்.

அரசின் கடும் எதிர்ப்பு வன்முறைகளுக்கு மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 42.3 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில், 90 சதவீதம் மக்கள் சுதந்திர நாடு வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்து வாக்களித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனி நாடு கேட்கும் உரிமையை காட்டலோனியா வென்றெடுத்திருப்பதாகவும், சுதந்திர பிரகடனத்துக்கான கதவு திறக்கப்பட்டிருப்பதாகவும் கேட்டலன் தலைவர் கார்லஸ் பூகிடமான்ட் தெரிவித்தார்.