வட பகுதிக்கு ஆயிரம் தமிழ் பொலிஸார் உடனடியாக தேவை. பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு பெண்கள் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டுமென சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே, அவர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். வட கிழக்கில் தமிழ் பொலிஸார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. விசேட விதமாக இந்த முறை வட கிழக்கில் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்பவர்களுக்குரிய பயிற்சி வட கிழக்கிலேயே நடைபெறவுள்ளது. அவர்கள் பயிற்சிக்கு வடகிழக்கு வெளியில் போக தேவையில்லை. எனவே மிக விரைவாக துணிச்சலுடன் இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பொலிஸ் நிலையங்களில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். எதிர்வரும் ஜனவரி மாதம் ஆயிரம் தமிழ் பொலிஸார் தேவையாக உள்ளது. பெண்கள் அதிகளவில் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மாதாந்த ஊதியமாக 55000 ரூபா பெற்றுக் கொள்ள முடியும். எமது மக்களின் முன்னேற்றத்தை தேவைகளை கருத்தில் கொண்டு விரைவாக பொலிஸ் சேவையில் இணையுங்கள் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.