SDFDSகிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து படித்த சிறுவன் ஒருவனை அச் சிறுவர் இல்ல பொறுப்பாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்கி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த தனுஜன் என்ற சிறுவனே இவ்வாறு மூர்க்கத்தனமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையான பிறேம்குமார் ஊடகமொன்றுக்கு கூறுகையில்,
எனது மகன் யாழ்.மத்திய கல்லூரியில் கல்வி கற்று வந்த நிலையில் குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகவும் மகனின் கல்வி நிலையை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் சேர்ந்திருந்தேன். இவ்வாறு மகனை சேர்த்து நான்கு மாதங்கள் வரையிலேயே வரும்.

இந்நிலையில் கடந்த நான்காம் திகதி எனக்கு குறித்த ஆச்சிரமத்தில் இருந்து தொடர்புகொண்டு உங்கள் மகனை வந்து கூட்டிச் செல்லுமாறு கூறியிருந்தார்கள. நான் அங்கு சென்று ஏன் எனது மகனை வெளியேற்றுகின்றீர்கள் என கேட்டபோது உங்களது மகன் வேறு சில சிறுவர்களோடு சேர்ந்து பெண் பிள்ளைகளுக்கு கடிதம் கொடுத்தார். எனவே அவனை கூட்டிச் செல்லுங்கள் என கூறியிருந்தார்.

இதற்கு நான் அப்படியாயின் கொடுத்த கடிதத்தினை காட்டுங்கள் என கேட்டபோது அதற்கு அதனை மறுத்திருந்தார்கள். இதன் பின்னர் நான் எனது மகனை கூட்டிக்கொண்டு செல்லும் போதே ஏனைய சிறுவர்களிடம் என்ன நடந்தது என கேட்டபோது அதற்கு அவர்கள் உங்களது மகனுக்கு அடித்துள்ளார்கள் என கூறினார்கள்.

அதன் பின்னரே நான் எனது மகனிடம் என்ன நடந்தது என கேட்டபோது, தாம் அச் சிறுவர் இல்லத்தின் வளவில் உள்ள தென்னை மரமொன்றில் இளநீர் குடிக்க போனதற்காக, தென்னை மரத்தின் கீழ் முட்டுக்காலில் கட்டி வைத்து மூன்று வயர்களை ஒன்றாக பின்னி மூர்க்கத்தனமாக அடித்ததாகவும் பின்னர் மாலை நேர வகுபபுக்கு செல்லவில்லை என கூறி அங்கு தங்கியிருந்த உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தன்மீது விக்கட் கட்டையால் அடித்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறு தமக்கு அடித்து விட்டு உடனே ஐஸ் கட்டிகளை போட்டு அடித்த தழும்புகளை மறைத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதன்போது நான் மகனின் உடலை அவதானித்து பார்த்தபோதே அவரது உடலின் பின்பகுதி கால் என உடலின் பல இடங்களில் காயங்களும் தளம்புகளும் காணப்பட்டன. அத்துடன் கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக பாடசாலை செல்ல விடாது தடுத்து வைத்திருந்ததாகவும் எனக்கு மகன் தெரிவித்தார்.

இதன் பின்னரே நான் மீண்டும் அவர்களிடம் சென்று ஏன் எனது மகனுக்கு அடித்தீர்கள் என கேட்டபோது தாம் அடிக்கவில்லை என தெரிவித்தனர். இதன்போது நான் எனது மகனின் உடம்பில் இருந்த தழும்புகளை காட்டி கேட்டபோது அதற்கு பின்னரே அவர்கள் உங்களது மகனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை இங்கே விட்டுவிட்டு போங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என தெரிவித்தனர். எனினும் நான் எனது மகனை அங்கே இனிமேலும் விட்டு விட்டு செல்ல முடியாத நிலையில் அழைத்து வந்துவிட்டேன்.

இச் சம்பவம் தொடர்பாக யாழ்.சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பொலிஸாரிடம் முறைப்பாடொன்று செய்ய சென்றபோது குறித்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதால் அங்கேயே முறைப்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக சிறுவர் துஷ்பிரயோக பிரிவின் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ததுடன் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவிலும் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளேன். என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.