759724058chandrika-speech-Lமத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது வட மாகாண அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன், மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கலந்துரையாடினார். நுன் கடன் திட்டம் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. நுன் கடனைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது. இதனையடுத்து கருத்துத் தெரிவித்த இந்திரஜித் குமாரசுவாமி,

பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். வடக்கில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அனைவரையும் எம்மால் சந்திக்க முடியாது. எனினும், பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களின் நலன் கருதி எம்மால் நிறைவேற்ற முடியுமான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். கடன் சுமையினால் துயரங்களை எதிர்கொண்டு மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு இலகுவான முறைகளை நடைமுறைப்படுத்த நாம் முயல்கின்றோம். அதிலும் அதிகக் கடன் சுமையை எதிர்கொண்டுள்ள மக்களை அடையாளம் கண்டு, அவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பது மத்திய வங்கியின் இலக்காகும் என்று கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் உள்ள சில தகவல்கள் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின. சட்டப்பூர்வமாக அனுமதிப் பத்திரங்களை பெறாத அல்லது பதிவு செய்யப்படாத கடன் வழங்கும் சில நிறுவனங்கள் வடக்கு, கிழக்கில் செயற்படுகின்றன. அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் மக்களுக்கு கடனுதவி வழங்கி வருகின்றனர்.

உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் 28 வீத வட்டியில் கடன் வழங்கியுள்ளது. சிலவேளை 100 க்கு 228 வீத வருடாந்த வட்டியை மக்களுக்கு செலுத்த வேண்டி ஏற்பட்டுளள்து. 228 வீதம் என்பது உலக சாதனையல்லவா? அதன் காரணமாகவே வட மாகாண மக்கள் இந்தளவு பாதிக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன் என்றார். சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் நுன் கடன் திட்டம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கலந்துரையாடியுள்ளார்.