jailஅநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் கடந்த பதினொரு நாட்களாக தொடர்கின்றது.

வவுனியா மேல்நீதிமன்றில் நடைபெற்றுவந்த வழக்கு விசாரணையை அநுராதபுரம் மேல்நீதிமன்றுக்கு இடம் மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவர்கள் உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர். இராசதுரை திருவரன், மதியழகன் சுலக்சன், கணேசன் தர்சனன் ஆகிய மூவரும் அநுராதபுரம் சிறையில் கடந்த 8வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.2013ம் ஆண்டு வவுனியா மேல்நீதிமன்றில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைகள் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று வந்தன. அந்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு இடம் மாற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் கடந்த 25ஆம் திகதிமுதல் தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.