hampanthotaமாகம்புர துறைமுகம், மத்தல சர்வதேச விமான நிலையம் என்பவற்றை நீண்ட கால குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கு எதிராக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 26 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட தீவிர நிலையை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் 3 பேர் காயமடைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்ம் ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் இன்றுகாலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டப் பேரணிமீது பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சற்று பதற்றமான நிலை தோன்றியிருந்தது. எவ்வாறாயினும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகியசெயற்பாடுகளுக்கு காலி நீதிவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.