களுவாஞ்சி குடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள குறுக்கு வீதியில் பாழடைந்த கிணற்றினுள் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக குறித்த பகுதியிலிருந்து துர் நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கோட்டை கல்லாற்றை சேர்ந்த தம்பிமுத்து செல்லத்துரை என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.