puplodi kreipஉண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் எதிர்வரும், 23ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பணியகம் நேற்று அறிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவர் மீளாய்வு செய்யவுள்ளார். நிலைமாறுகால நீதி மற்றும் மறுசீரமைப்பு செயன்முறைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் சிக்கல்களை அடையாளம் காண்பதும், இதனைச் சமாளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர் கலந்துரையடவுள்ளார்.  இலங்கை அரசாங்கம், எதிர்த்தரப்பினர் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடுவது தமது பயணத்தின் நோக்கம் என ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார். அவர் தெற்கு, மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் தமது இலங்கை பயணம் தொடர்பான அறிக்கையை 2018ஆம் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.