வடக்கு மாகாணத்தின் விவசாய, நீர்ப்பாசன, கால்நடை மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் க.சிவநேசன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் கிராம பிரிவில் அமைந்துள்ள கல்குவாரி கிராமத்தின் மக்களை நேற்று சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
பல்வேறு வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டும், வளங்கள் மிக்குறைவாக உள்ளதும், பிரச்சினைகள் ஏராளம் காணப்படுவதுமான இக்கிராமத்தின் பாழடைந்த பொது நோக்கு மண்டபத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது. தொழிலின்மை, தோல்விகண்டுள்ள வாழ்வாதாரத் திட்டங்கள், கல்வி வளர்ச்சியின்மை அக்கிராமத்திற்கென்று ஒரு பொது அமைப்புக்கூட இல்லாத நிலைமை, குடிநீர்ப்பிரச்சினை போன்ற விவகாரங்கள் பற்றி முறைப்பாடுகள் அமைச்சரிடம் பொதுமக்கள் முன்வைத்திருந்ததோடு, அவற்றிற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நடைமுறைச் சாத்தியமான வழிவகைகளும் அமைச்சரால் ஆராயப்பட்டிருந்தது.