அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவர் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சேலைன் ஏற்றப்படுவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது.
மற்றுமொரு அரசியல் கைதி தொடர்ந்தும் சிறைக்கூடத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2012 ஆம் ஆண்டு வௌ;வேறு காலப்பகுதியில் இவர்கள் மூவரும் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுறை திருவருள் ஆகியோரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரும் நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஒருவருமே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மூவரும் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 16 ஆவது நாளை எட்டியுள்ளது. தமக்கு எதிரான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து கைதிகள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.