Captureddfஇலங்கை கணக்கியல் நிபுணர்கள் சங்க வருடாந்த மாநாடு-2017 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினது தலைமையில் நேற்று பிற்பகல் பத்தரமுல்ல வோற்றஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

‘மாற்றமுறும் சவால்களை வெற்றிகொள்வதற்காக அர்ப்பணித்தல்’ எனும் தொனிப்பொருளிலான வருடாந்த மாநாடு 15 ஆவது தடவையாக நேற்று ஆரம்பமாகி இன்று நிறைவடைகிறது. இந்த மாநாட்டின் மூலம் காலத்துக்கேற்ற தொனிப்பொருளுடன், தெரிவுசெய்யப்பட்ட துறைசார் நிபுணர்களின் அறிவை பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. முதன்மை துறையான கணக்கியல்சார் தலைப்புக்களுக்கு மேலதிகமாக நவீன தொழில்நுட்ப தாக்கங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவது விசேடமானதாகும். 2016 க.பொ.த உயர்தர வணிகத்துறையில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்ற நிபுணி தனஞ்சனி ரூபசிங்க எனும் மாணவிக்கான பரிசினை ஜனாதிபதி வழங்கினார்.

நிறுவன அனுசரணையாளர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசில்களும் வழங்கப்பட்டன. இலங்கை கணக்கியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் பட்டய கணக்காளர் ஜே.எம்.யூ.பி. ஜயசேகரவினால் ஜனாதிபதியிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். நேற்று பத்தரமுல்ல வோற்றஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற விஞ்ஞான தொழில்நுட்ப, ஆராய்ச்சி அமைச்சின் கொள்கை மற்றும் திட்டமிடல் தொடர்பான விசேட அறிஞர்கள் கலந்துரையாடலிலும் ஜனாதிபதி பங்குபற்றினார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் எதிர்கால பொருளாதார மற்றும் அபிவிருத்தி திட்டமிடலில் அறிஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது எனவும், நாட்டின் முன்னேற்றத்துக்காக நாட்டிலுள்ள அறிஞர்கள் குரலெழுப்ப வேண்டிய காலம் மலர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் செனவிரத்ன மற்றும் அறிஞர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.