fdsfகிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்லச் சிறார்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிறுவர் இல்லத்தில் உள்ள இளைஞனை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளதுடன்,

சிறுவர் இல்ல நிர்வாகிகளையும் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. கிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்ல சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளானதாக கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் சிறுவன் ஒருவனின் தந்தையால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள் குறித்த சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கபட்டனர் என்ற சந்தேகத்தில் ஐந்து சிறுவர்களை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு அனுமதித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சிறுவர் இல்லத்தில் இருக்கின்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இல்லத்தின் நிர்வாகிகளையும் கடுமையாக எச்சரித்துள்ளது. அத்தோடு மாவட்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளை சென்று சிறுவர்களின் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, தமது சிறுவர் இல்லத்தில் எவ்விதமான வன்முறைகளே அல்லது குறித்த சம்பவங்கள் எதுவுமோ இடம்பெறவில்லையென மாகா தேவா சிறுவர் இல்லத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்துவந்த நிலையில் இவ்வாறு நீதிமன்றத்தால் இளைஞனுக்கு விளக்கமறியலும் நிர்வாகத்திற்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.