salila munasingaலிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முனசிங்கவை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்குமாறு, அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது.

நிதி மோசடி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள அவருக்கு, குறித்த நிறுவனத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அந்த அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக அமரசூரியவுக்கு அறிவித்துள்ளார். லிற்றோ கேஸ் நிறுவனம் அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த வெற்றிடத்திற்கு பதில் தலைவர் ஒருவரை நியமிக்குமாறும் ரவீந்திர ஹேவாவிதாரண அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் பணம், இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து, நேற்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கமைய, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷலில முணசிங்கவை எதிர்வரும் 25ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.