வடக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் க. சிவநேசன் அவர்கள் நேற்றுமுன்தினம் (10.10.2017) மாந்தை கிழக்குப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பாண்டியன்குளம் மற்றும் அம்பாள்புரம் 5ம்கட்டை ஆகிய பிரதேசங்களின் பொதுமக்களையும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
பாண்டியன்குளம் சந்திப்பில்,
1 சிராட்டிக்கும், முறியாக்குளத்தின் கீழ்வரும் 100 ஏக்கர் வயல் நிலங்களில் பயிர்ச் செய்கையிலீடுபட மேற்கொள்ளப்படவேண்டிய ஆயத்த நடவடிக்கைகள்,
2 நட்டாங்கண்டல் -சிராட்டிக்குளம் வீதியின் புனரமைப்பு,
3 மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் செயலற்றுக் கிடக்கும் குழாய்க் கிணறுகளின் சீரமைப்பு,4 மூன்றுமுறிப்புக் கிராமத்தின் வீதி, குளம், ஆலை ஆகியவற்றில் மேற்கொள்ளவேண்டிய திருத்த வேலைகள்,
5 விநாயகபுரம் குடிநீர்ப் பிரச்சினை,
6 சேதன பயிர்செய்கை முறைக்குரிய பயிற்சிகள் ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டன.
அம்பாள்புர சந்திப்பில், வவுனிக்குளம் நன்னீர் மீன்பிடிச் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது.
1 குளத்திற்குத் தேவையான மீன்குஞ்சுகளை வழங்குதல்,
2 நாற்பது மீனவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்னமும் கிடைக்காதிருக்கும் வலைகள்,
3 படகுகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள்,
4 மீன்குஞ்சுகள் வளர்க்கும் இடத்தின் உரிமை சம்பந்தமாக காணப்படும் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.