vikkiஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குடிகொண்டிருக்கும் நிலையில் அநுராதபுரத்திலுள்ள மூன்று அரசியல் கைதிகளுக்கு எதிரான அரச தரப்பு சாட்சிகள் அஞ்சுவதாகக் கூறி வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து, அநுராதபுரத்துக்கு மாற்றுவது நொண்டிச்சாட்டு என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்படி சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வவுனியா மேல் நீதிமன்றத்திலுள்ள தமது வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முடிவடையும் தறுவாயில் முன்னரே கைது செய்து வைத்திருக்கப்பட்ட சிலரை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்றும் அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்புபட்டிருந்தார்கள் என்பதுமே அவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.
இதுபற்றி அரசசாட்சியாக மாறிய ஏனைய தமிழ் கைதிகளின் பாதுகாப்பு பற்றியே அரசாங்கம் தற்பொழுது கரிசனை செலுத்துகிறது. இதில் அரசியல் கலந்திருப்பதாகத் தெரிகிறது.
நடந்ததோ இல்லையோ எப்படியாவது விடுதலைப் புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் புலிகளும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கம் கூறமுடியும்.
இதனால்தான் வேறு கைதிகளையே அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர அரசு பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவதாக முன்னாள் பிரதம நீதியரசரான, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அரச சாட்சிகளாக மாறிய தமிழர்கள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும். அவ்வாறு சாட்சியமளிக்கும் போது தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரச தரப்பு பெற்றுக்கொண்டது என்பது வெளிப்பட்டுவிடும் என்பதாலேயே சட்டமா அதிபர் திணைக்களம், வழக்குகளை அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசசாட்சிகளின் சாட்சியம் முரணாக இருந்தால் கூட வெறுமனே குற்றஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து கைதிகளைக் குற்றவாளிகள் ஆக்கிவிடலாம் என்றே அரசு கருதுகின்றது. இதனால்தான் வெறும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் வைத்து குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்களுக்கு மாற்றுவதை உசிதமென அரசாங்கமும் அதன் சட்டத்துறைத் தலைமையதிபதியும் எண்ணுவதாக முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளர்.