கொழும்பு முன்னாள் பிரதம நீதிமன்ற வைத்திய அதிகாரி, பேராசிரியர் ஆனந்த சமரசேகரவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பேராசிரியர் ஆனந்த சமரசேகர இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 8.30க்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் டொக்ஸி இன்று உத்தரவு பிறப்பித்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரை சந்தேகநபராகப் பெயரிட்டு கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு இதற்கு முன்னர் இடம்பெற்றிருந்த வழக்கொன்றின் போது நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர். கொலையுண்ட வசீம் தாஜூதீனின் உடற்பாகங்கள் சில காணாமற்போனமைக்கு பிரேதப் பரிசோதனையை மேற்கொண்ட ஆனந்த சமரசேகரவே காரணம் எனவும் குறித்த பரிசோதனையை நடத்திய நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் இருவருக்கும் கொலையின் உண்மைத் தகவல்களை மறைப்பதற்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த பிடியாணையைக் கோரியிருந்தனர்.
தகவலறிக்கையொன்றின் ஊடாக நீதிமன்றத்தில் தகவல்களை சமர்ப்பித்து இந்த பிடியாணை கோரப்பட்டிருந்ததுடன், அது தொடர்பில் இன்று கட்டளையொன்று பிறப்பிக்கப்படவிருந்த நிலையில், பேராசிரியர் ஆனந்த சமரசேகர நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். இந்த நிலையிலேயே பேராசிரியர் ஆனந்த சமரசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.