protest-4மட்டக்களப்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் உயிரிழந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கூழாவடியில் வசிக்கும் 43 வயதான சிவகுமார் லதாஸ்ரீ பிரசவ வலி காரணமாக கடந்த நான்காம் திகதி பிற்பகல் 7.00 மணிக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 7.30 மணிக்கு குழந்தையை பிரசவித்துள்ளார். வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய சத்திரசிகிச்சை மூலம் ஆண்குழந்தை குழந்தை கிடைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணின் வயிற்றில் இருந்து ஒரு கட்டி எடுக்கப்பட்டதாகவும், கொழும்புக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதற்கான மருத்துவ அறிக்கை தற்போது கிடைத்துள்ளதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5ஆம் திகதி அதிகாலை அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் 17 ஆம் திகதி வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தாக உறவினர்கள் கூறியுள்ளனர். சட்ட மருத்துவ அதிகாரியினால் சட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நேற்றையதினம் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் சிவகுமார் லதாஸ்ரீக்கு குறித்த தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு 10 நாட்கள் கடந்த பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தனியார் வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.