அமெரிக்காவின் ஆறு அதிநவீன நாசகாரி போர்க்கப்பல்கள் இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளன. விமானம் தாங்கிய போர்க்கப்பல் ஒன்றுடன் இணைந்தே இந்த போர்க்கப்பல்கள் இலங்கையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளன.
அத்துடன் சீனா, இந்தியா, பாகிஸ்தான், தென்கொரிய போர்க்கப்பல்களும் இலங்கை வரவுள்ளன. இலங்கை அரசாங்கம் ஏனைய சர்வதேச நாடுகளுடன் தொடர்ச்சியாக பாதுகாப்பு நட்புறவினை பலப்படுத்தி வரும் நிலையில் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு கூட்டுப் பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் ஆறு போர்க்கப்பல்கள் இந்த மாத இறுதியில் இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன. இம்மாதம் 28ஆம் திகதியில் இருந்து 31ஆம் திகதிக்குள் இலங்கையில் கொழும்பு துறைமுகத்தை இவை வந்தடையவுள்ளன. இதில் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களுடன் இணைந்தே ஏனைய கப்பல்களும் இலங்கை நோக்கிய பயணத்தினை ஆரம்பித்துள்ளன. அதேபோல் ஒரு வாரகாலம் இக்கப்பல்கள் இலங்கையில் தரித்திருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்தியாவின் இரண்டு போர்க்கப்பல்கள், சீனாவின் ஒரு போர்க்கப்பல் மற்றும் பாகிஸ்தானிய போர்க்கப்பல் ஒன்றும், தென்கொரியாவின் பிரதான இரண்டு போர்க்கப்பல்களும் இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தினுள் இலங்கைக்கு வரவுள்ளது. வௌ;வேறு தினங்களில் வருகைதரவுள்ள நிலையில் இந்த போர்க்கப்பல்களுடனும் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சிகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுக்கவுள்ளனர்.