தமிழ் அரசியற் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் இன்று மதியம் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்னால் கோரிக்கை ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். இலங்கையின் சிறைகளில் பல இடங்களிலே தமிழ் அரசியற் கைதிகள் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக முடிவின்றித் தடுத்து வைக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் தொடர்பாக எந்த விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் நல்லாட்சி அரசு எடுப்பதாகத் தெரியவில்லை. இதன் செயற்பாடாக வவுனியாவில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக அரசும், தமிழ்த் தலைமைகளும் பாராமுகமாகவே இருந்து வருகின்றன. இதனைக் கண்டித்தும், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எஸ். டினேஷ் காந்த் தெரிவித்தார்.
விசாரணையின்றி இத்தனை வருடம் சிறையிலடைத்தும் விடுதலை செய்ய இரக்கம் வரவில்லை. நீதி மறுக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி வேண்டும், நிபந்தனை இன்றி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், சட்டமா அதிபர் திணைக்களத்தின் செய்ற்பாடு நியாயமானதா போன்ற பல கேள்விகள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.