asdsdassயுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். யுத்த வெற்றிவீரர்களை இவ்வாறு பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை மீறுவதைப் போன்றதாகும் என்று இலங்கைக்கான விஜயத்தை முன்னெடுத்த

உண்மை, நீதி, நட்டஈடு, மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் தெரிவித்தார். இதற்கு சிறந்த உதாரணமாக பிரேஸிலில் அண்மையில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை குறிப்பிடலாம். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொறுப்புக்கூறல் பொறிமுறையை தொடர்ந்தும் தாமதமாக்கவேண்டாம். இவ்வாறு தொடர்ந்தும் இந்த செயற்பாட்டை தாமதமாக்குவது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்திருக்கின்றது. எனவே அரசாங்கம் உடனடியாக நம்பகரமான பரந்துபட்ட சுயாதீனமான வெளிப்படைத் தன்மைமிக்க அனைவரும் பங்கேற்கக்கூடிய பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்வைக்கவேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு 14 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்ட உண்மை, நீதி, நட்டஈடு,மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் நேற்று தனது இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்கு முன்பதாக கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து தனது மதிப்பீடுகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தபோதே மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில்:

வடக்கு கிழக்கு தெற்குக்கு விஜயம் செய்தேன்.
நான் இலங்கைக்கு ஐந்தாவது தடவையாக விஜயம் செய்து பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயங்களை ஆராய்ந்திருக்கின்றேன். நான் இம்முறை அளுத்கம, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு, புத்தளம், மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தேன். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது குடும்பத்தாரையும் சந்தித்து கலந்துரையாடினேன்.

யார் யாரை சந்தித்தேன்?
கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், தேசிய சகவாழ்வு, அரசகரும மொழிகள் அமைச்சர், சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துசமய விவகார அமைச்சர், நீதி அமைச்சர், கல்வி அமைச்சர், ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், சபாநாயகர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், இராணுவத்தளபதி, கடற்படை தளபதி, விமானப்படைத்தளபதி, தேசிய புலனாய்வு சேவை தலைமை அதிகாரி, பொலிஸ்மா அதிபர், சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் தலைவர்,

நல்லிணக்கத்தை கூட்டிணைப்பதற்கான செயலகத்தின் செயலாளர், மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இராஜதந்திர முக்கியஸ்தர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு, மற்றும் கிழக்குமாகாண ஆளுநர்கள், உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். எனக்கு முன்னர் இலங்கைக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐ.நா. நிபுணர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களின் விடயங்களையும் நான் கவனத்தில் எடுத்துள்ளேன்.

எனது முன்னைய விஜயம்
2015 ஆம் ஆண்டு நான் இங்கு வருகை தந்ததன் பின்னர் தற்போது நிலைமையை பார்க்கும்போது சில மாற்றங்களை அவதானிக்கின்றேன். குறிப்பாக 19 ஆவது திருத்த சட்டத்தைக் குறிப்பிடலாம். நல்லிணக்க பொறிமுறைக்கான ஆலோசனைகளை முன்னெடுப்பதற்கான செயலணி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டாலும் அதன் பங்குதாரர்களாக சிவில் சமூகப் பிரதிநிதிகள் இருந்தனர். மிகவும் குறுகிய காலத்தில் இந்த செயலணியானது விரிவுபட்ட ஆழமான ஒரு அறிக்கையை முன்வைத்தது. இதுவரையான காலப்பகுதியில் இந்த அறிக்கையானது மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கின்றது.

காணாமல் போனோர் அலுவலகம்
அடுத்ததாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவிற்கான ஆணையாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இது ஒரு சுயாதீனமான நியமனமாக இருக்கும் என கருதுகின்றேன். நம்பகரமானவர்களை இதற்கு நியமிக்கவேண்டும்.

தாமதம் வேண்டாம்
புதிய அரசாங்கமானது 100 நாள் வேலைத்திட்டத்திலேயே பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை வழங்கியது. அந்த வாக்குறுதிகள் இலங்கை இணை அனுசரணை வழங்கிய ஐ.நா. பிரேரணையிலும் காணப்படுகின்றது. பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதில் இலங்கை அரசாங்கத்தில் காணப்படும் தாமதமானது பல்வேறு துறைகளில் கேள்விகளை எழுப்புவதாக அமைந்திருப்பதுடன் நம்பகத்தன்மையை குறைப்பதாகவும் காணப்படுகின்றது.
குறிப்பாக காணி விடுவிப்பு விடயத்தை விரைவு தன்மை இருப்பதாக தெரியவில்லை. இலங்கை பாதுகாப்பு தொடர்பில் பல சவால்களை சந்தித்தது என்பதை மறுப்பதற்கில்லை. அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை வழங்கவேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. எனினும் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் செயற்பாட்டில் தாமதமானது ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதையே பல்வேறு நாடுகளின் அனுபவங்கள் கற்றுத்தருகின்றன.

வேட்டையாட முயற்சிக்கவில்லை
இங்கு நிலைமாறுகால நீதி தொடர்பான பொறிமுறை என்பது வேட்டையாடுவது அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அத்துடன் இது ஒரு களையெடுப்பும் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இங்கு யுத்தவீரர்களை நீதிமன்றம் முன் கொண்டுவரமாட்டோம் என பல்வேறு தரப்பினர் கூறுவதை அவதானிக்கின்றோம்.

இது நிலைமாறு கால நீதி தொடர்பான ஒரு தவறான நோக்கத்தை மக்களுக்கு வழங்கிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது. அதாவது பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான ஒரு பொறிமுறை என காட்டப்படுவதற்கு முயற்சிக்கப்படுகிறது. இங்கு யாரையும் வேட்டையாட முயற்சிக்கவில்லை.

விரட்டப்பட்ட முஸ்லிம்கள்

பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பதாக பொறுப்புக்கூறல் பொறிமுறை அமையும். பாதிக்கப்பட்ட அனைவரும் நீதியை எதிர்பார்க்கின்றனர். 600 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் நீதி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக விரட்டப்பட்டனர். இவ்வாறு பட்டியல் நீள்கின்றது. இதுவொரு முடிவில்லாத பட்டியல் என்றே கூறலாம்.

யுத்த வீரர்களை நீதிமன்றம்முன் கொண்டுவரமாட்டோம் என கூற முடியாது
பொறுப்புக்கூறல் பொறிமுறையானது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதுடன் சந்தேக நபர்களையும் பாதுகாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. அதுமட்டுமன்றி இவ்வாறு யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் எனக்கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை மீறுவதாக அமைந்திருக்கின்றது. அவ்வாறு செய்ய முடியாது. நீதிமன்றமே இதுதொடர்பான தீர்மானங்களை எடுக்கவேண்டும்.

பிரேசில் சம்பவம் சிறந்த உதாரணம்
அண்மையில் பிரேஸில் நாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஒருவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த செயற்பாடானது நீதியானது உள்நாட்டில் நிலைநாட்டப்படாவிடின் சர்வதேச மட்டத்திலாவது பெறப்படும் என்பதற்கான ஒரு சான்றாகும். எனவே அரசாங்கம் உடனடியாக நம்பகரமான பரந்துபட்ட நிலைமாறுகால நீதிப்பொறிமுறை திட்டமொன்றை முன்வைக்கவேண்டும் என்பது பிரேஸில் சம்பவமானது மற்றுமொரு காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.

அந்தவகையில் நான் எனது இலங்கை விஜயம் மற்றும் அவதானிப்புக்கள் மதிப்பீடுகள் தொடர்பாக சில பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன்வைக்கின்றேன். இங்கு ஐ.நா. விசேட நிபுணர்களின் பரிந்துரைகள் சட்டத்தினால் பிணைக்கப்பட்டவை அல்ல என்பதையும் நீங்கள் மனதில் கொள்ளவேண்டும்.

பரிந்துரைகள்
கால அட்டவணையுடன் கூடிய பரந்துபட்ட மற்றும் சுயாதீனமான நிலைமாறுகால நீதிப்பொறிமுறை ஒன்றை அரசாங்கம் உடனடியாக முன்வைக்கவேண்டும். அந்த பொறிமுறையானது உண்மை, நீதி, நட்டஈடு, மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களை உள்ளடக்கவேண்டும்.

நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பாக மக்களின் கருத்துக்களை பெறுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட செயலணியின் பரிந்துரைகளின் நன்மைகளை அரசாங்கம் பெறவேண்டும்.

அதுமட்டுமன்றி இதுவரையான காலப்பகுதியில் ஐக்கியநாடுகளின் உதவிகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக பயன்படுத்தவில்லை எனத் தெரிகின்றது. எனவே அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்திலிருந்து மேலும் நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்
பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் சட்டம் சர்வதேச தரங்களைப் பின்பற்றுவதாக அமையவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விடயங்களை உடனடியாக மீளாய்வு செய்யவேண்டும்.

வட கிழக்கில் இராணுவத்தை குறைக்கவேண்டும்
இராணுவத்தினால் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவதை நிறுத்தவேண்டும் என்பதுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம்.

காணி விடுவிப்பை விரைவுபடுத்துங்கள்
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள காணித் தொடர்பான ஒரு வரைபடத்தை உடனியாக தயாரிக்கவேண்டும். காணி விடுவிப்பு தொடர்பான ஒரு நேர அட்டவணை அவசியமாகின்றது. மீளளிக்கப்படாத காணிகளுக்கு நட்டஈடு வழங்குவது அவசியமானதாகும். இது தொடர்பில் இராணுவத்தரப்பினர் மட்டும் முடிவெடுக்காத வகையிலான திட்டம் வேண்டும்.

கண்காணிப்பதை நிறுத்துங்கள்
மனித உரிமை காப்பாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் முக்கியமாக பெண்கள் ஆகிய தரப்பினர் மீதான பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். கடந்த காலங்களில் செயற்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ( வெ ளியிடப்படாதவை) உடனடியாக வெ ளியிடப்படவேண்டும்.

காணாமல் போனோர் அலுவலகம்
சுயாதீன தன்மை வெ ளிப்படைத்தன்மை என்பனவற்றின் அடிப்படையில் காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்படவேண்டும். ஆணையாளர்கள் இலங்கையின் பன்முகத்தன்மைகொண்ட சமூக கட்டமைப்பை பிரதிபலிப்பதாக அமையவேண்டும்.

மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடுவதற்காக பிரதிநிதிகள் காணாமல்போனோர் அலுவலகம் சார்பாக நியமிக்கப்படவேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதற்கான அலுவலகங்கள் நியமிக்கப்படவேண்டும். இந்த காணாமல்போனோர் அலுவலகத்தை கண்காணிப்பதற்காக பாதிக்கப்பட்போரினால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குழுவை நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும்.

சர்வதேச உதவிகளை பெறுங்கள்
தடவியல் விசாரணைகளுக்காக உள்நாட்டு, பிராந்திய, மற்றும் சர்வதேச உதவிகளைப் பெறலாம். காணாமல்போனோர் அலுவலகங்களும் செயற்பாட்டில் நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து செயற்படவேண்டும்.

உண்மை கண்டறியும் ஆணைக்குழு அவசியம்
அனைத்து பாதிக்கப்பட்ட சமூகங்களின் நன்மை கருதி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று நிறுவப்படவேண்டும். இதற்கு ஒரு பரந்துபட்ட ஆணை வழங்கப்படவேண்டும். இதற்கான சட்டமூலம் விரைவாக கொண்டுவரப்படவேண்டும். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கான ஆணையாளர் நியமனத்தில் பாதிக்கப்பட்டோர் இடம்பெறுவதை உறுதிப்படுத்தவேண்டும்.

நீதிபதிகளின் தேசியத்தை ஆராயவேண்டாம்
மனித உரிமை மீறல்களை ஆராய்வது தொடர்பான தற்போதைய நீதி கட்டமைப்பில் காணப்படுகின்ற வரையறைகள் குறித்து ஆராய்ந்து முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பொறுப்புக்கூறல் பொறிமுறையில் இடம்பெறவேண்டிய நீதிபதிகளின் தேசியத்துவம் தொடர்பான விவாதமானது இந்த செயற்பாட்டை அரசியல் மயப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆராயப்படவேண்டும்.

நட்டஈடு வழங்கும் திட்டம் அவசியம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக ஒரு பரந்துபட்ட திட்டம் முன்னெடுக்கப்படவேண்டும். இது இனம், மதம், உள்ளிட்ட எந்தவொரு விடயத்தையும் கருத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்படவேண்டும். இந்தவிடயத்தில் பால்நிலை விடயம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். குறிப்பாக பெண்கள், குடும்பத் தலைவிகள் தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும். நட்டஈடு வழங்குதல் ஆனது உண்மை மற்றும் நீதியை புறந்தள்ளுவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. நட்டஈடு செயற்பாடானது பொறுப்புதன்மையுடன் செயற்படவேண்டும்.

காணி ஆணைக்குழு அவசியம்
இது உண்மையைக் கண்டறியும் ஆணையுடன் தொடர்புபடுவது பயனுள்ளதாக இருக்கும். காணிவிடுவித்தல் தொடர்பான ஒரு கால அட்டவணையுடன் ஒரு வரைபடம் உடனடியாகத் தயாரிக்கப்படவேண்டும். இராணுவத்தரப்பினர் நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான காணிகளை மட்டுமே வைத்திருக்கவேண்டும். இது இராணுவத்தரப்பினால் மட்டும் ஆராயப்படக்கூடாது. இதற்கான ஒரு பரந்துபட்ட பார்வைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்படவேண்டும். காணி விவகாரங்களுக்காக ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டும். மக்கள் 30 வருடங்களாக தரமற்ற வசதிகளுடன் வாழ்ந்ததைக் காணமுடிகின்றது. இது நடுத்தர வருமானம் கொண்ட நாட்டுக்கு பொருத்தமானதல்ல. இது தொடர்பான கொள்கை ஆராயப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான வீட்டுத்திட்டமானது மக்களுக்கு பொறுத்தமானதாக அமையவேண்டும்.

உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதியுங்கள்
பாதிக்கப்பட்ட மக்கள் தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு நினைவுகூரும் செயற்பாடானது நட்டஈடு பெறுவதைப் போன்ற ஒரு உணர்வைக் கொண்டது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடானது சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

எனது அறிக்கை எவ்வாறு அமையும்?
நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சட்டமா திணைக்களத்திற்கான அதிகாரங்கள், பாதுகாப்புத்துறை மீளாய்வு என்பன இங்கு ஆராயப்படவேண்டும். அரசியலமைப்பு மறுசீரமைப்பு இடம்பெறும் தற்போதைய நிலையில் அவசியமாகின்றது. சர்வதேச மனித உரிமை தரங்களை உள்நாட்டில் நிறைவேற்றவேண்டும். குறிப்பாக பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச சாசனத்தை இலங்கை அமுலுக்குக்கொண்டுவரவேண்டும். எனது அறிக்கையில் நீதித்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பாக பல பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளேன். காரணம் நிலைமாறுகால நீதித்துறையில் முக்கிய பங்கை வகிக்க உள்ளன.
(http://www.virakesari.lk/ 23.10.2017)