பாரிய ஊழல் மோசடிகள் குறித்து ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்குமாறு கோரப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பூரணமாக முன்வைக்கவே கால நீடிப்பை கோருவதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு குணதாஸ தெரிவித்தார்.
ஆணைக்குழுவினால் கடந்த இரண்டரை ஆண்டுகாலப்பகுதியில் அரச சொத்துகள் தொடர்பான 34 பாரிய மோசடிகள் குறித்த விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சட்ட நடவடிக்கைகளுக்காக அவை தொடர்பான 17 அறிக்கைகள் கையளிக்கப்படவுள்ளன. கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற பாரிய ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக ஆயிரத்து 600 முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளன. இந்த நிலையில் தமது இறுதி அறிக்கை ஊடாக குறித்த பாரிய மோசடிகளை எதிர்காலத்தில் தடுப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதாகவும், இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளது.
இந்நிலையில் பதவிக்காலம் முடிய முன்னர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டியுள்ளதாகவும், ஆகவே மேலும் மூன்று மாத காலம் ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதுடன்,. ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தற்போது தயார் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை கையளிக்க மேலும் ஆறுவாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.