president qatarகட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் அந்த நாட்டின் பிரதமர் சேய்க் அப்துல்லா பின் நசார் பின் காலிபா அல் தானியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை எதிர்காலத்தில் பல்வேறுப்பட்ட துறைகள் ஊடாக மேலும் விஸ்தரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் மின்சாரம் மற்றும் சக்தி வளத் துறைகளில் நிலவும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஜனாதிபதி கட்டார் பிரதமருக்கு விளக்கியுள்ளார். அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பினை கட்டார் பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த சந்திப்பை அடுத்து இரண்டு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள், மின்சக்தி, நீர் முகாமைத்துவம், சுகாதாரம் மற்றும் நிதி துறைகளில் காணப்படும் தொடர்புகளை மேம்படுத்தத்தக்க ஏழு புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

இரண்டு நாடுகளின் தூதுவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் விசேட கடவுச்சீட்டு உடையவர்கள் வீசா பெற்றுக்கொள்ளாது நாடுகளிற்கு உட்பிரவேசிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று முதலாவதாக கைச்சாத்திடப்பட்டது. கட்டார் வெளிவிவகார அமைச்சர் Sheikh Mohamed Bin Abdur Rahman Al Thani மற்றும் இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.

மின்னுற்பத்தி துறைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கட்டாரின் மின்சக்தி மற்றும் கைத்தொழிற்துறை அமைச்சர் Dr. Mohamed Bin Salih Al Sada மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை சார்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்டாரின் பெருநகரங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சர் Mohamed Bin Abdullah Al Rumaihi ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அந்தநாட்டின் பொதுமக்கள் சுகாதார அமைச்சர் Dr. uanan Binth Mohamed Al Kuwari ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். இதேவேளை கட்டாருக்கான விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.