யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததால்
இவ்வாறு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்தாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்த வகுப்பு புறக்கணிப்பிற்கு பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களும் ஆதரவு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரசியல் கைதிகளுக்கு தீர்வொன்றை பெற்று தருமாறு வலியுறுத்தி இன்று பல்கழைக்கழத்திற்கு முன்பாக பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு,
01) சிறைச்சாலைகளில் பல வருடங்களாக எந்தவிதமான விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.
02) உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடன் தீர்வு காணப்படல் வேண்டும்.
03) சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் அவல நிலை உணர்ந்து பொறுப்புக் கூற வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள், அசமந்தப் போக்கினைக் கைவிட்டு உரிய தரப்பிடம் அழுத்தங்கைப் பிரயோகித்து கைதிகளின் விடுதலை விடயத்தில் பொறுப்புக் கூறல் வேண்டும்.