கிளிநொச்சி இரணைதீவுப் பகுதியில், பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் வகையில், காணி அளவீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என, பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஷ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த இரணைதீவு நிலம், இன்றுவரை விடுவிக்கப்படாது, கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
இந்த நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இவ்வாண்டு மே மாதம் 1ஆம் திகதி முதல், இரணைதீவு மக்கள், தாங்கள் தற்காலிகமாகத் தங்கியுள்ள இரணைமாதாநகர் பகுதியில், 153 நாட்களுக்கும் மேலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில், பூநகரி கடற்கடை முகாமில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பில், இரணைதீவை கடற்படையினர் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு, பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டதுடன், நீண்ட இழுபறிக்குப் பின்னர் பொதுமக்களின் காணிகளை விடுவதற்கு இணக்கம் தெரிவித்ததுடன், காணிகளை அடையாளப்படுத்தவும் இணங்கினர்.
இதையடுத்து, பூநகரிப் பிரதேச செயலத்தால், பத்துப் பேர் கொண்ட குழுவினரால், இரணைதீவில் பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்தி, அளவீடு செய்வதற்குஅண்மையில் (23) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவீட்டுப் பணிகளுக்கான, அப்பகுதி பொதுமக்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. தற்போது நில அளவீட்டாளர்கள் உட்பட பத்துப் பேர் கொண்ட குழுவினரே அங்கு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பூர்வீகமாக வாழ்ந்த பொதுமக்கள் எவரும், அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் பூநகரிப்பிரதேச செயலாளர் எஸ். கிருஸ்னேந்திரன் கூறுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“காணி அடையாளப்படுத்தி அளவீடு செய்யும் நடவடிக்கைகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்துவதற்காகவே, இந்த நில அளவை மேற்கொள்ளப்படுகின்றது.
“அளவீட்டுப்பணிகள் நிறைவடைந்தப் பின்னர், இவற்றை விடுவிக்குமாறு, பாதுகாப்பு அமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவித்து, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்ததன் பின்னரே, மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்க முடியும்” என்றார்.